நான் ஒரு அப்பா...

இன்று போல் உள்ளது அன்று,

கண் திறக்ககூட தென்பில்லாமல்

அழுகை தவிர வேறேதும் அறியாமல்

ஐந்து வினாடி முன் பூத்த பூவாய்

என் நெஞ்சில் பிஞ்சுப்பாதம் பதிய

 

என்ன இதழ்கள் அவை,

செங்கமலமே பொறாமைப்படும்

 

கண்கள்,

கண்களே அல்ல,

தேன் குவளைப் பூக்கள்

 

கொள்ளை அழகு கொள்ளை அழகு

கண் பிரித்திட முடியா கொள்ளை அழகு

 

அழுகையும் மகிழ்ச்சியும்

ஒரே விகிதத்தில் பொத்துக்கொண்டு

கண்ணீர் மட்டுமே ஒரே மொழியாய்

 

சிறிதின் பின்,

 

பிஞ்சுக்கரம் கொண்டு என்னை அழைத்து

நச்செனக் கொடுப்பாள் ஒரு முத்தம்

என் நாடிநாளம் கடந்து

உயிர்நாடி தொடும் அதன் உஷ்ணம்

 

பொய்யாய்க் கோபம் கொண்டு

உன்மையில் அழுகையில்

அவளின் கன்னம் என் கரத்தில்

விழிநீர் களைந்து எறிவேன் கணத்தில்

 

பள்ளியில் அவள் தன்

நண்பர்கள் காண்கையில்

அவர்களோடு இவள் தன்

கூடல் காண்கையில்

சிறிதே கொள்கிறேன் துன்பம் - அவள்

எனைப்பிரிவாளோ எனும் அச்சம்

 

அதோ போகிறாள் தன்

கனவு நோக்கி

என் கரம் பிரித்து

விமானத்தின் பிடியில்

 

ஏதோவொரு சுனாமிக்கான

ஆயத்தம் என் நெஞ்சில்

 

இதோ வருகிறாள்

அன்று பறந்தவள்

 

கரங்களை முத்தமிட்டுக் காத்திருக்கிறேன்

அவளின் கைதனைப் பொருத்திக்கொள்ள

 

ஆனால் அவள் கைகள்?

 

அவன் யார்?

இதோ வருகிறாள் நெருங்கி - இல்லை

வருகிறார்கள் நெருங்கி

 

அறிமுகப்படுத்தினாள் காதலென

அறிமுகப்பட்டேன் காயமென

சம்மதித்தேன் நியாயமென

 

கொண்டேன் விரைவில் இரு பேரர்

பறந்தே லண்டன் மீண்டிடவே

 

வாழ்க்கை மெதுவாய் நகர்ந்திற்று

என் முன்னிருக்கையில் என் கொழுந்து

 

வியக்கிறேன் இதுவோ என் ரோஜா

மிதக்கிறேன் நானோ அந்த நாள் ராஜா

 

நான் பிடித்த கரங்கள் பற்ற

இன்றெனக்குத் தேவை விண்ணப்பம்

 

அப் பிஞ்சுக்கன்னங்களில் உதடு பதிக்க

இன்றெனக்குத்தேவை உரிமை

 

நான் அணைத்த ஆன்மாவிற்கு - இன்று

வேறொருவன் சொந்தக்காரனாம்

 

உலகம் வாழ் அப்பாக்கள் சார்பில்

இதோ நானோர் அப்பா...


Comments

Popular posts from this blog

வர்ணங்கள்

அலைகள்